Sunday, July 23, 2017

BIO - METRIC

*டிசம்பர் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை பதிவு அமல்*

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை வருகைப்பதிவு முறை டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலகத்துக்கு வரும் நேரத்தை கண்காணிக்க விரல் ரேகை பதிவு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை தலைமைச் செயலகம் உள்ளிட்ட எந்த அரசு அலுவலகங்களிலும் இந்த வருகை பதிவு முறை நடைமுறையில் இல்லை.

அரசு ஊழியர்கள் காலை 9.45 மணி முதல் 10 மணிக்குள் வேலைக்கு வரவேண்டும். மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு காலையில் 10.10 மணிவரை வேலைக்கு வர சலுகையும் உள்ளது மாதம் 2 நாட்கள் தலா 1 மணி நேரம் ‘பெர்மி‌ஷன்’ கொடுக்கப்படுகிறது. காலம் தாழ்த்தி வந்தால் பெர்மி‌ஷனில் கழித்துக் கொள்ளலாம். அல்லது அரை நாள் தற்செயல் விடுப்பில் சென்றுவிடும்.

ஆசிரியர்களை பொறுத்த வரை காலை 9.20 மணி முதல் 4.10 மணிவரை பணி நேரம் உண்டு. ஆனால் சில ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

தினசரி நேரம் கடந்து வருபவர்கள் மீது பள்ளி கல்வித்துறை சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனாலும் இன்னும் ‘லெட்ஜரில்’ கையெழுத்திடும் முறைதான் செயல்பாட்டில் உள்ளது.

இப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவேடு, ஊதியம் சர்வீஸ் பைல், ஓய்வு விவரம் உள்ளிட்ட சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைபடுத்த முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளது.

இதை செயல்படுத்தும் ஒருங்கிணைப்பாளராக விப்ரோ நிறுவனம் உள்ளது. டிஜிட்டல் மயம் பற்றி உயர் அதிகாரி கூறியதாவது:-

அரசின் வரவு- செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ள ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வருகிறது.

இதில் டிஜிட்டல் கையொப்பம், விரல் ரேகை பதிவு மூலம் வருகைப் பதிவை உறுதி செய்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கட்டாய மாக்கப்படுகிறது.

இதில் விரல் ரேகை வருகைப்பதிவு டிசம்பர் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அமலாகிறது. தமிழகம் முழுவதும ஒரே சமயத்தில் நடைமுறைபடுத்துவது சற்று சிரமம் ஆனாலும் படிப் படியாக அனைத்து அலுவலகங்களுக்கும் இதை கொண்டு வந்து செயல்படுத்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment