Saturday, July 22, 2017

குடியரசுத் தலைவருக்கான புதிய அதிகாரிகள்!

புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராம் நாத்
கோவிந்தின் அலுவலகத்துக்கான முக்கிய அதிகாரிகளை மத்திய அரசு நேற்று ஜூலை 21 இரவு நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சஞ்சய் கோத்தாரி புதிய குடியரசுத் தலைவரின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் அசோக் மாலிக், குடியரசுத் தலைவர் மாளிகையின் புதிய ஊடக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வனத்துறை அதிகாரியான பரத்லால், குடியரசுத் தலைவர் மாளிகையின் புதிய இணை செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

சஞ்சய் கோத்தாரி 1978 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. ஹரியானாவை சேர்ந்தவர். ஏற்கனவே மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் செயலாளராக பணியாற்றிய சஞ்சய் கோத்தாரி, கடந்த 2016 ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். ஐந்தே மாதங்களில் அவர் மத்திய பொதுத் துறை தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போது பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் முதன்மை செயலாளராக இருக்கும் டாக்டர் பி.கே.மிஸ்ராவுக்கு சஞ்சய் கோத்தாரி மிகவும் நெருக்கமானவர் என்று டெல்லி அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவரின் செயலாளர் என்ற உயர் பதவிக்கு சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பரத்லால் குஜராத்தை சேர்ந்த 1988 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.எஃப்.எஸ். அதிகாரி. வனத்துறையில் பணியாற்றிய இவர், இப்போது குஜராத் அரசின் குடியுரிமை ஆணையராக டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

குடியரசுத் தலைவரின் புதிய ஊடக செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அசோக் மாலிக், இருபது வருடங்களாக இந்திய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் அரசியல், பொருளாதாரக் கட்டுரைகளை எழுதி வருபவர். நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ

விருதினை கடந்த வருடம் பெற்றவர்.

25 ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதும் குடியரசுத் தலைவர் மாளிகையில் மேற்கண்ட இந்த புதிய அதிகாரிகள் பணிகளைத் தொடங்குவார்கள்.

No comments:

Post a Comment