ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேக மற்றும் இலவச பயிற்சி இணையதளத்தை ஆஃபிஸர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆஃபிஸர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிர்வாகிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளான இஸ்ரேல் ஜெபசிங், இணை இயக்குநர் ஆர்.ரங்கராஜன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
ஐஏஎஸ் தேர்வுக்கு தகுதிச் சுற்று, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் தயாராக வேண்டும். இந்தத் தேர்வில் அன்றாட நிகழ்வுகள் (current Affairs) குறித்த கேள்விகள் அதிகளவில் கேட்கப்படுகின்றன.
தேர்வுக்காக எதைப் படிக்க வேண்டும்; எதைப் படிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில் முக்கியச் செய்திகள், நிகழ்வுகளுடன் கூடுதலான அல்லது முக்கியமற்ற நிகழ்வுகளையும் சேர்த்து படிக்கும்போது அவற்றை நினைவில் வைத்துக் கொள்வது கடினமான ஒன்றாகும்.
இதைக் கருத்தில்கொண்டு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக www.steelframeofindia.org என்ற பிரத்யேக மற்றும் இலவச இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம். ஐஏஎஸ் தேர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சர்தார் வல்லபாய் படேல் நினைவாகவே இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் நீதிமன்றங்களில் தினமும் வெளியாகும் முக்கிய தீர்ப்புகள், மத்திய- மாநில அரசுகளின் சலுகைகள் மற்றும் திட்டங்கள் உள்பட அனைத்து துறை சார்ந்த நிகழ்வுகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். நன்கு தேர்வு செய்த தகவல்கள் மட்டுமே இதில் பதிவேற்றப்படுவதால் எதைப் படிக்க வேண்டும் என குழப்பம் அடையத் தேவையில்லை. தகவல்கள் தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் வினாப் பட்டியலில் அதைப் பதிவிடலாம். இதைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய இணையதளத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பதிலளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் கேட்டறியலாம்.
ஆன்-லைன் வகுப்புகள்: ஐஏஎஸ் தேர்வர்களுக்கு மற்றொரு வசதியாக ஆன்-லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நேரடியாக வகுப்பில் சேர முடியாத மாணவர்கள், நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமான பயிற்சி வகுப்புகளில் அளிக்கப்படும் கற்பித்தல் விடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு தேர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆன்-லைன் வகுப்புகளுக்கு வழக்கமான பயிற்சி வகுப்பைக் காட்டிலும் 30 சதவீத கட்டணம் குறைவாகும். கிராமப்புற மாணவர்கள், நேரடியாக வகுப்புகளுக்கு வர முடியாத சூழ்நிலையில் உள்ள மாணவர்களின் நலனுக்காக இந்தப் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்-லைன் வகுப்பு சேர விரும்புவோர் www.officersiasacademy.com என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
நண்பர்களுடன் பகிரவும்
No comments:
Post a Comment