Thursday, January 11, 2018

TNPSC ஊழல்





துணை கலெக்டர் பதவியை பிடிக்க…தமிழ்நாடு தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளுக்கு 9 லட்ச ரூபாய் பணமும் 10 பவுன் நகையும் லஞ்சம் கொடுத்ததாக ராம்குமார் என்பவரை அதிரடியாக கைது செய்திருப்பது தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது.

துணை  கலெக்டர்,  போலீஸ்  டி.எஸ்.பி.,  உள்ளிட்ட  74 பணியிடங்களுக்கான  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் நடந்த மோசடியை அம்பலப்படுத்தினோம். செக்ஷன் ஆபீசர் சிவசங்கரனைத் தொடர்ந்து புரோக்கர் குமரேசன்,  அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர் பெருமாள், மெயின் தேர்வில் 9 லட்ச ரூபாய் பணம், 10 பவுன் நகை லஞ்சம் கொடுத்த ராம்குமார் உள்ளிட்டவர்களையும் அதிரடியாக கைது செய்துள்ளது டி.சி. மல்லிகா தலைமையிலான மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ். இதனைத்தொடர்ந்து, 2016-ல் தேர்ச்சி பெற்ற 74 தேர்வர்களையும் எதிர் மனுதாரராக சேர்த்து குறுக்குவிசாரணை செய்யவேண்டும் என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன்  சூமோட்டோ வழக்காக எடுத்து அதிரடி உத்தரவிட, ஒட்டுமொத்த தமிழக அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை பற்றவைத்துக்கொண்டிருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் மோசடி நடந்திருப்பதாக திருநங்கை ஸ்வப்னா கார்த்திக் தொடர்ந்த வழக்கில் அதன் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், உள்துறைச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர், பத்திரப்பதிவுத்துறைச் செயலாளர் ஆகியோரையும் எதிர் மனுதாரராக்கி உத்தரவிட்டிருந்தார் நீதிபதி. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா இதுவரை பதில் அளிக்கவில்லை. இதில், மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயமே டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சிபெற்ற 74 பேரில் 64 பேர், ‘"கோச்சிங் சென்டர் மோசடி! –டி.என்.பி.எஸ்.சி தகிடுதத்தம்!'’ என்கிற தலைப்பில் 2017 டிசம்பர் 03-05 தலைப்பில் நக்கீரனில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த  அப்பல்லோ ஸ்டடி சென்டரில் படித்தவர்கள் என்பதுதான் காவல்துறையின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு காக்கிகளிடம் விசாரித்தபோது, ""டி.என்.பி.எஸ்.சி. குறித்து நக்கீரனில் வெளியான கட்டுரையை விசாரணை அதிகாரிகளான நாங்களும் படித்தோம். அதில், அப்பல்லோ ஸ்டடி சென்டரின்  இயக்குநர் சாம் இராஜேஸ்வரன் சில விளக்கங்களை கொடுத்துள்ளார். அதைவைத்தே, அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறோம். உதாரணத்துக்கு, 31 யூனிட் இருக்கிறது. எந்த கேள்வியாக இருந்தாலும் அதற்குள்தான் வரும் என்கிறார் சாம். ஆனால், நடப்பு நிகழ்வுகளுக்கான 20 சதவீத கேள்விகள் 31  யூனிட்டில் வராது. மேலும், எத்தனையோ பிரதமர்கள் இருக்க பாகிஸ்தான் பிரதமரை தகுதி நீக்கம் செய்தது ஏன்? என்று கேட்டது எப்படி? எத்தனையோ திட்டங்கள் இருக்க சௌபாக்யா திட்டம் என்றால் என்ன? என்று கேட்டது எப்படி? போன்ற கேள்விகள் அப்பல்லோ ஸ்டடி சென்டரின் மாதிரி தேர்வில் 2016 அக்டோபர் 5-ந் தேதி கேட்கப்பட்டிருக்கின்றன. அதே கேள்விகள், 15-ந் தேதி நடந்த  டி.என்.பி.எஸ்.சி.  குரூப்-1  மெயின் தேர்வில் கேட்கப்பட்டது எப்படி?

2017 அக்டோபர்- 13, 14, 15-ந் தேதிகளில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மெயின் தேர்வு நெருங்கும் நேரத்தில் 5, 6, 7-ந் தேதிகளிலேயே வினாக்களுடன் விடைகளும் கொடுத்தது எப்படி? பல கோணங்களில் விசாரித்தோம். திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.  டி.என்.பி.எஸ்.சி. கேள்வித்தாள்களை கல்லூரிப் பேராசிரியர்கள்தான் தயாரிக்கிறார்கள். அந்தக் குழுவில் மிக முக்கியமானவர் சென்னை மாநிலக்கல்லூரி வேதியியல் பேராசிரியர் ஜெய்சங்கர்.  இவர், கடந்த 10 வருடங்களாக அப்பல்லோ கோச்சிங் சென்டரில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பவராகவும் உள்ளார். இவர்மூலமும்  வினாத்தாள் முன்கூட்டியே லீக் அவுட் ஆகிறதா என்கிற கோணத்தில் விசாரிக்க இருக்கிறோம். மேலும், சில கல்லூரிப் பேராசிரியர்களை விசாரிப்போம்.

2007-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரை மூன்றுமுறை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதன்மைத் தேர்வுகளில் முதல் மற்றும் இரண்டாம் தாளில்  10 ஆண்டுகளாக கேட்கப்படும் கேள்விகளை மட்டுமே கேட்டுவிட்டு மெயின் தேர்வில் மட்டும் டி.என்.பி.எஸ்.சி. கேட்கும் நடப்பு நிகழ்வுகளுக்கான கேள்விகளை அப்படியே கேட்க முடிந்தது எப்படி? சாம் இராஜேஸ்வரனின் அப்பல்லோ ஸ்டடி சென்டரில் பணம் கட்டி படித்து பாஸ் பண்ணிய 64 பேரும் சைதை துரைசாமியின் மனிதநேயம் அகடமியில் படித்ததுபோல் ஊடகங்களில் தவறாக விளம்பரம் கொடுப்பது ஏன்? அதை, கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

தற்போது, 2017 குரூப்-1 தேர்வில் இரண்டாவது இடம் பிடித்தவர் மணிராஜ். பொதுவாக, டாப் ரேங்கர்ஸ் அனைவரும் தன்னுடைய ஸ்டடி சென்டரில்தான் பாஸ் பண்ணிவிட்டு போகவேண்டும் என்று நினைப்பார் சாம். ஆனால், மணிராஜ் அப்பல்லோவில் படிக்கவில்லை. ஆனால், எப்படி இரண்டாவது ரேங் வாங்கினார் என்று விசாரித்தபோது அப்பல்லோ கோச்சிங் சென்டரில் படித்து தற்போது 7-வது ரேங்க் எடுத்த  சதீஷ்குமாரும் இவரும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, டி.என்.பி.எஸ்.சி.யில் கேட்கப்போகும் முக்கியமான கேள்விகளை அப்பல்லோவில் படிக்கும் சதீஷ்குமார் தனது நண்பர் மணிராஜுக்கும் கொடுத்திருப்பாரோ என்கிற சந்தேகம் வலுத்திருக்கிறது.

மேலும், சதீஷ்குமார் 2015-லேயே  தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி. ட்ரெயினிங்கில் இருக்கிறார். ஆனால், அவரது லட்சியமே துணை கலெக்டர் ஆவதுதான். அதனால்தான், 2016-ல் நடந்த தேர்வில் மீண்டும் எழுதி துணை கலெக்டர் பதவியை பிடிக்கும் அளவுக்கு தரவரிசை பட்டியலில் இடம்பெற்றிருந்தார். ஆனால், தற்போது 74 பேரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்ததால் எதுக்கு வம்பு? டி.எஸ்.பியாகவே தொடரலாம் என ட்ரெயினிங் போய்விட்டார் சதீஷ்குமார்.  தேர்ச்சி பெற்ற 74 பேரின் விடைத்தாள்கள் அனைத்துமே தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கமலா மாணிக்கத்தின்  விடைத்தாளைப்போலவே எத்தனை விடைத்தாள்கள் வெளியில் எடுத்து மோசடியாக விடைகள் எழுதப்பட்டன என்பதை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். அதற்குப்பிறகு, சாம் இராஜேஸ்வரனை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டால் டி.என்.பி.எஸ்.சி.யின் ஊழல் உறுப்பினர்கள் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும்''’என்கிறார்கள் அதிரடியாக.


லஞ்சம் கொடுத்து பதவியை பிடிக்கும் அதிகாரிகள்தான் அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்யக் கற்றுக் கொடுத்து எந்த ஆட்சி மாறினாலும் மாறாமல் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவதைவிட ஆபத்தானது அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது. ஊழல் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழல் துணை கலெக்டர்கள் தற்போது, கோடிகளை கொட்டிக்கொடுத்து நியமன ஐ.ஏ.எஸ். ஆவதற்கான ரேஸிலும் இருக்கிறார்கள். இதற்கென்று தனியாக விசாரணைக் கமிஷன் வைத்தால்தான் பல்வேறு உண்மைகள் வெளிவரும்.

No comments:

Post a Comment