Monday, July 14, 2025

E - Pettagam / E பெட்டகம் மூலம் சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம்

*சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்!*



*♨️ சான்றிதழ்கள் 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம்.*

*சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்!*

*E-பெட்டகம் இணையதளத்தில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது.


Wednesday, November 15, 2023

கந்த சஷ்டி கவசம் / Kantha Sasti Kavasam

கந்த சஷ்டி கவசம் 
நம்மை காக்கும் தெய்வமான முருக பெருமானை நோக்கி பால தேவராயன சுவாமிகள் பாடியது தான் “ கந்த சஷ்டி கவசம் ”.





இந்த கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது. சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் இந்த பாடலைப் பாடியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் என்றாலே அவர்களின் குரலும் சேர்ந்தே நம் மனதில் வந்து போகும்...

கந்த சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக 

ரஹண பவச ர ர ர ர ர ர ர
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோ தனென்று
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விழி செவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!

இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேலே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!

Thursday, March 9, 2023

முதல்வர் காப்பீடு திட்ட கார்டு / CM NHIS Card

*பிரதமர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*.. 




அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..

காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . 
ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி நிரப்பி 
அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க...

 (குடும்பத்துல இருக்கிற எல்லோரோட ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து யாரேனும் ஒருவர் செல்லவும்.) 

பின் VAO எழுதி சீல் போட்டுத் தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்..

அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்... 
ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள்.
செலவு ஏதும் கிடையதுங்கோ...

இந்த பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய்.5 லட்சம் ( மாநில அரசு1 லட்சம் , மத்தியரசு 4லட்சம் )வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.

 அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை ).CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில் இலவசமாக எடுக்கலாம்.

இதுல ENT சர்ஜ்சரிஸ் , 
கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், Including Aasthuma, Dengue, Hearing Aid, Free CT Scan, Free MRI Scan எல்லாமே கவர் ஆகும்..

எதிர்பாராமல் திடீரென ஏற்படும் தேவைப்படும் நேரத்தில் அங்கும் இங்கும் அலைவதைத் தவிர்த்து 
இப்பவே அலைந்து 
காப்பீடு அட்டை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி : பகிர்வு தகவல்

Tuesday, January 4, 2022

*ஜிடி நாயுடு அவர்களின்**நினைவுநாள் பதிவு*(கிபி 1974 ஜனவரி 4)*

*இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஜிடி நாயுடு அவர்களின்*
*நினைவுநாள் பதிவு*
(கிபி 1974 ஜனவரி 4)


✍️கோபால்சாமி துரைசாமி நாயுடு என்பதன் சுருக்கமே ஜிடி நாயுடு.
✍️கோயம்புத்தூர் கலங்கல் என்ற கிராமத்தில்
கிபி1893 மார்ச் 23ல் பிறந்தார்.
✍️இளம் வயதிலேயே பல நூல்களை படிக்கும் ஆர்வம் கொண்டிருந்தார்.
✍️கோவை மோட்டார் தொழிற்சாலையில் பணி சேர்ந்து திறம்பட பணியாற்றினார்.
✍️பின்னர் திருப்பூர் பருத்தி தொழிற்சாலை ஒன்றை சொந்தமாக தொடங்கினார்.
✍️யுனைடெட் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தை தொடங்கி வெற்றி கண்டார்.
✍️ஜெர்மனியில் நடைபெற்ற பொருட்காட்சியில் இவரது கண்டுபிடிப்புகள் பல பரிசுகளைப் பெற்றன.
✍️விவசாயத் துறையிலும் பல்வேறு சாதனைகளைப் புரிந்தார்.
✍️சுய முயற்சியால் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளை நிறுவினார்.
✍️இந்தியாவில் முதன்முதலாக மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
கோயம்புத்தூரில்
நிறுவினார்.
✍️கோவை அவினாசி சாலையில் இவர் கண்டறிந்த பொருட்களின் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.
Jaypee🙏

Monday, December 27, 2021

*கக்கன்*

🦉பி.கக்கன் நினைவு நாள்:😢
*************************!
உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் கக்கன் அவர்கள் ஒரு வைரகல்.

மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடு களுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர்.

மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.

காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றனர்.

இந்திய சுதந்திரத்திற்க்கு பின் தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனம் என்று அதிகார வர்கத்தால் பிரிக்கபட்ட மனித இனதின் முதல் மனிதர் கக்கன். அந்த புனிதர் வகித்த பதவியை தான் இன்று பல பணம் திண்ணும் பிணங்கள் வகிக்கிறது.

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார்.

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.

விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களேயே ஆரம்பிக்கபட்டது.

அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.

அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார்.

பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைப் போய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார்

கக்கன். கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு,.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11,000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்.

டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது