Tuesday, December 25, 2018

*அன்புள்ள தினமணி ஆசிரியர் அவர்களுக்கு,*

24.12.18   அன்று தினமணியில் வெளியான "தேவையா இத்தனை  விடுமுறைகள்" கட்டுரை வாசித்தேன்.  அது குறித்து அடிப்படையான சில உண்மைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . இந்த உண்மைகளை கட்டுரையாளர் அறியாமல் இருக்க வாய்ப்புள்ளது.  ஆனால் பத்திரிகை செய்தி ஆசிரியருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்.

# 2019 தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு விடுமுறை பட்டியலில்  22 விடுமுறைகளில்  5 நாட்கள் சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் அமைகிறது.  இந்த ஆண்டு இது குறைவு

#  அதே போல மத விடுப்புகள் பெரும்பாலும் பண்டிகை அரசு விடுமுறை நாட்களிலோ சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ அமைகின்றன.

#  ஈட்டிய விடுப்பு அரசு ஊழியர்களுக்கு தான் 30 நாட்கள். ஆசிரியர்களுக்கு  17 நாட்கள் தான். இந்த விடுப்பை துய்க்காமல் ஒப்படைத்தால் பணப்பயன்கள் உண்டு என்கிற காரணத்தால்  90 சதவீத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இந்த விடுப்பை துய்ப்பதில்லை. சேமிக்கவே விரும்புவார்கள்.  இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. 

. # 21 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் 1 நாள் ஈட்டிய விடுப்பு குறையும்.  28 நாட்களுக்கு மேல் தாண்டினால் மருத்துவர் போர்டு மற்றும் மாவட்ட உயர் அதிகாரியின் அனுமதி பெற்று தான் மீண்டும் பணியில் சேர முடியும்.  மருத்துவ விடுப்புகளால் பதவி உயர்வு, ஆண்டு ஊதிய உயர்வு, பணி வரன்முறை போன்ற தனிப்பட்ட பாதிப்புகள் இருப்பதால் மருத்துவ விடுப்பு மிக அவசியமானால் மட்டுமே துய்க்கப்படுகிறது. 15 நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்தாலே அதில் 4 நாட்கள் வார விடுமுறையாகும்.
# உள்ளூர் விடுமுறைகள் அனைத்தும் சனிக்கிழ மைகளில் ஈடு செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே.

# அரசு தலைவர்கள் இறப்பின் போது விடப்படும் விடுமுறை பாதுகாப்பு கருதியே. ஓய்வு எடுக்க அல்ல.

# தொடக்கப் பள்ளிகள்  220 பணி நாட்கள் , மேல்நிலைப் பள்ளிகள்  210 பணி நாட்கள், கல்லூரிகள்  180 பணி நாட்களுக்கும் குறையாமல் பணியாற்ற வேண்டும் என்பது அரசு விதி. மற்ற அரசு  அலுவலகங்கள் இதை விட அதிக நாட்களே செயல்படுகின்றன.யாரும் மீற முடியாது.இது  வருகைப்பதிவேட்டை பார்த்தாலே தெரியும். இப்படியிருக்கையில் 174 நாட்கள் தான் பணி நாட்கள் என்று கட்டுரையாளர் எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது தெரியவில்லை.

# காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை ஆகியவை மாணவர்கள் மனநலம், கற்கும் திறன்,சோர்வு,உடல்நலன் ஆகியவற்றை யோசித்தே கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களால் சிபாரிசு செய்யப்படுகிறது  . இந்த  விடுமுறை நாட்களில் ஆசிரியர்களை ஊதியம் பெறாமல் பணியாற்ற தயாரா எனக்கேட்கின்றார் கட்டுரையாளர்.  இந்த விடுமுறைக்கு மட்டும் வேறு வேலை தேட முடியுமா?

# தேர்தல் நாளன்று அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள் என்ற சாதாரண விஷயம் கூட கட்டுரையாளருக்கு  நினைவுக்கு வரவில்லை.

# சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை சுட்டிக்காட்டிய கட்டுரையாளர் இந்தியா ஒரு மதசார்பற்ற, நல்லிணக்கம் காட்டும் பல்வகை கலாச்சாரத்தை கொண்ட நாடு என்பதை மறந்துவிடக்கூடாது.  இங்கே அனைத்து வகையான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. 

# அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகளால் அரசுக்கு எவ்வித நஷ்டமுமில்லை

# பல வகை விடுப்புகள் இருந்தாலும் விடுப்பு அனுமதி  கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் காவல்துறை நண்பர்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி பார்க்கின்றோம்.

# விடுப்பு இருந்தும் அதிகாரிகள் /தலைமை ஆசிரிய்ர்கள் அலுவலக நலன் கருதி அனுமதி தராததால் அதை அனுபவிக்க முடியாதவர்கள் ஏராளம்.

# பெரும்பாலானவை ஈராசிரியர் பள்ளிகளாகவே இருப்பதால் விடுப்பு இருந்தாலும் தேவைப்படும்போது துய்க்க முடியாதவர்கள் ஏராளம்.  

# கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு சனி ஞாயிறு  விடுமுறை இரவு பகல் என்பதே  கிடையாது.  மாவட்ட ஆட்சியர்,வட்டாட்சியர் எப்போது அழைத்தாலும் செல்ல தயாராக இருக்க வேண்டும்.

# தீபாவளி, புத்தாண்டு பண்டிகைக்கு வீட்டுக்கு செல்லாமல் பணியாற்றும் காவல்துறையினர், போக்குவரத்துக்கு ஊழியர்கள் இவருடைய கண்களுக்கு புலப்படவில்லை போலும்.

# சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் நகராட்சிக்கு  குடிநீர் வழங்கும் ஊழியர்கள்,  ஆண்டு முழுவதும் செயல்படும் அரசு மருத்துவமனை ஊழியர்கள், மின்சார ஊழியர்கள்..இவர்களை பார்த்த பின்பும் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்று புலம்புவதை என்னவென்பது.

பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது

ஒரு தரமான நாளிதழ் இதை போல எடுத்தேன் கவிழ்த்தேன் ரக கட்டுரைகளை பிரசுரிப்பது அழகல்ல.

Saturday, December 22, 2018

*போக்ஸோ சட்டம் (Protection of Children from Sexual Offences Act - 2012)*

Group 2  Mains
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது.

இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

● போஸ்கோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம்: இதற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டணையாகவும் உள்ளது. கூடவே அபராதமும் விதிக்கப்படும்.

● போஸ்கோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6 ந் படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

● போஸ்கோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்பைகளை தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம். அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

●  போஸ்கோ சட்டம் பிரிவு 9 மற்றும் 10ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிரை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

● போஸ்கோ சட்டம் பிரிவு 11 மற்றும் 12ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

● போஸ்கோ சட்டம் பிரிவு 13 மற்றும் 14ன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது, குற்றம். இது இணைய தளம், கணிணி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும்.

●  போஸ்கோ சட்டம் பிரிவு 18ன் படி குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

●  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே, குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும்.

●   குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம். இதற்கு 6 மாத சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

இதில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை என்ற ஷரத்தில் மாற்றம் கொண்டு வந்து மரண தண்டனை என்ற சட்டத்திருந்ததை அவசரச்சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வயது வரம்பும் 18 ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

.
#இந்தியன்_எக்ஸ்பிரஸ்

Thursday, December 20, 2018

*அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள்*

*அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*

இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும்.தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

உதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இணையானவை என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன.

ஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

இந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி
துறைதயாரித்துள்ளது.இந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.

*தகுதியற்ற படிப்புகள் என்னென்ன?*

*பெரியார் பல்கலை:* எம்.காம்., - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய, இரண்டுபடிப்புகள், எம்.காம்., படிப்புக்கு, இணை கிடையாது.

*அழகப்பா பல்கலை:* எம்.எஸ்சி., 'இன்பர்மேஷன் டெக்னாலஜி' படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை

*சென்னை பல்கலை:* எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.

*பாரதியார் பல்கலை:* எம்.எப்.டி., என்ற, 'மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்' மற்றும் எம்.காம்., 'இன்டர்நேஷனல் வணிகம்' ஆகிய படிப்புகள், எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை.

*எம்.எஸ்சி.,* படிப்பில் பல்வேறு பாட பிரிவுகளான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., ஆகிய, எட்டு படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல.

*பாரதிதாசன் பல்கலை:*
எம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ - காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ., என, ஒன்பது படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை இல்லை

*அண்ணாமலை பல்கலை:* எம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.ஏ., ஆகிய, ஐந்து படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.

*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை:* எம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,, ஆகிய மூன்று படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை.

*அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்:* எம்.ஏ., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, எம்.ஏ., தமிழுக்கு இணையானது அல்ல; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி - எம்.ஏ., சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது.

இந்த பட்டியல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, TNPSC செயலர், அனைத்து பல்கலைகளின் பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டு
உள்ளது.

Tuesday, December 18, 2018

*பிட்காயின் என்றால் என்ன?*

#expected

பிட்காயின் (Bitcoin) ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம். 1990களில் இறுதியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்க ஆரம்பித்தன. ஆனால் தொடக்கத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. 100 ரூபாயை ஒருவருக்கு அனுப்பினால், அனுப்பப்படும் பைலை வைத்து, மேலும் பல பிரதிகள் எடுத்தார்கள். அது வங்கிகளுக்கு பிரச்சினையாக உருவெடுத்தது. ஆனால் பிட்காயின் இயங்கும் தொழில்நுட்பமான பிளாக்செயின் மூலம் பல பிரதிகள் எடுக்க முடியாது.

இதை கண்டு பிடித்தது ஒருவரா அல்லது ஒரு குழு உறுப்பினர்களா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் சந்தோஷி நகமோடோ (Satoshi Nakamoto) என்னும் பெயரில் பிட்காயின் மற்றும் அதன் சாப்ட்வேரை இணையதளத்தில் வெளியிட்டார்கள். இந்த தொழில்நுட்பம் மூலம் ஒருவர் மற்றவருக்கு நேரடியாக கரன்ஸியை அனுப்ப முடியும். அனுப்பியது யார் என்றும் தெரியாது, பெறுபவர் யார் என்றும் தெரியாது. இந்த தொழில்நுட்பத்தின் பெயர் பிளாக் செயின். கரன்ஸியின் பெயர் பிட்காயின் இந்த பரிவர்த்தைகளை யாரும் திருட முடியாது.

இருந்தாலும் இந்த பரிவர்த்தனைகளுக்கு ஒப்புதல் வழங்கும் நிறுவனங்களுக்கு மைனிங் நிறுவனங்கள் என்று பெயர். இந்த பரிமாற்றங்கள் ஒரு கணக்கு புதிர் வடிவில் இருக்கும். அதனை சரி செய்யும் பட்சத்தில்தான் பரிமாற்றங்கள் நடக்கின்றன. மைனிங் நிறுவனங்கள் அதனை சரி செய்கின்றன. அதற்கு முன்னால் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பார்ப்போம்.

பிளாக்செயின்

உலகம் முழுக்க பிட்காயின் பரிவர்த்தனைகள் ஒவ்வொரு வினாடிக்கும் நடந்து கொண்டிருக்கும். இதனை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யலாம். அல்லது மற்றவர்களுக்கு அனுப்பலாம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகில் எங்கு இருப்பவர்களும் வினாடிகளுக்குள் பரிவர்த்தனை செய்ய முடியும்.

இந்த அனைத்து பரிவர்த்தனைகளும் புதிர் வடிவில்தான் இருக்கும். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் நடக்கும் அத்தனை பரிவர்த்தனைகளும் ஒரு லெட்ஜரில் பதிவு செய்யப்படும். அடுத்த பத்த நிமிடங்கள் அடுத்த லெட்ஜரில் பதிவு (https://blockchain.info/) செய்யப்படும். இந்த பரிவர்த்தனைக்கு ஒப்புதல் வழங்கும் நிறுவனங்களுக்கு மைனிங் நிறுவனங்கள் என பெயர். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் 12.5 பிட்காயின் இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதுபோல மைனிங் நிறுவனங்கள் பல இருக்கின்றன.

சமீபத்தில் ஐசிஐசிஐ உள்ளிட்ட சில வங்கிகள் இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் பணப்பரிவர்த்தனைகளை சோதனை செய்தது. இந்த தொழில்நுட்பம் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் பகுதி பகுதியாக பாதுகாக்கப்படும்.

எவ்வளவு பிட்காயின்?

ரூபாய் மதிப்பை அதிகபட்சம் 2 தசமங்களாக பிரிக்கலாம். ஆனால் பிட்காயினை எட்டு தசமங்களாக பிரிக்க முடியும். (0.00000001). பிட்காயின் உருவாக்கும் போதே மொத்தம் 21 மில்லியன் பிட்காயின் மட்டுமே உருவாக்க முடியும் என புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வெளியிடப்படும் பிட்காயின் அளவு ஒவ்வொரு நான்கு வருடத்துக்கும் குறைந்துகொண்டே இருக்கும். அதாவது பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக மைனிங் நிறுவனங்களுக்கு (பத்து நிமிடத்துக்கு) 12.5 பிட்காயின் வழங்கப்படுகிறது.

2020-ம் ஆண்டு முதல் இதில் பாதியாக 6.25 பிட்காயின் மட்டுமே வழங்கப்படும். இதை தவிர பிட்காயின் வேறு எந்த ரூபத்திலும் புழக்கத்துக்கு வராது. இந்த அளவிலே பிட்காயின் புழக்கத்துக்கு வரும்பட்சத்தில் 2140-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட மொத்த பிட்காயினும் சந்தைக்கு வரும். அதன் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும்.

மைனிங் நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பிட்காயின்களை தவிர மற்றவற்றை எக்ஸ்சேஞ்சில் விற்றுவிடுவார்கள்.

எங்கு வாங்குவது?

பிட்காயின்கள் வாங்க மற்றும் விற்பதற்காக உலகம் முழுவதிலும் எக்ஸ்சேஞ்ச்கள் உள்ளன. இந்தியாவிலும் ஜெப்பே (https://www.zebpay.com/), காயின்செக்யூர் (https://coinsecure.in/), யுனோகாயின் (https://www.unocoin.com/) உள்ளிட்ட எக்ஸ்சேஞ்ச்கள் உள்ளன. அனுப்புவது யார், எடுப்பது யார் என தெரியாததால் முறையற்ற பணம் இங்கு பதுங்க வாய்ப்பு இல்லை. காரணம் இந்த எக்ஸ்சேஞ்ச்கள் ரொக்கமாக வாங்குவதில்லை. இவை அனைத்தும் டிஜிட்டல் கரன்ஸி. தவிர கேஒய்சி இல்லாமல் பிட்காயின் வாங்க முடியாது.

சர்வதேச கரன்ஸி

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான கரன்ஸி இருக்கிறது. ஆனால் பிட்காயின் என்பது சர்வதேச கரன்ஸி. அனைத்து இடங்களுக்கும் இந்த கரன்ஸியை மாற்ற முடியும். இப்போதுதான் இந்த கரன்ஸியை ஒவ்வொரு நிறுவனங்களாக ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பிட்காயின் 1,000 டாலருக்கு மேல் வர்த்தகமானது. ரூபாய், டாலராக வைத்திருக்காமல் பிட்காயின் வைத்திருக்கலாம் என்று வாதாடுபவர்களின் நோக்கம் இந்த மதிப்பு.

ரூபாய், டாலரை வைத்து பொருள் வாங்கலாம் பணப்பரிவர்த்தனை செய்யலாம். இதையும் பிட்காயினில் செய்ய முடியும். இருந்தாலும் பிட்காயினுக்காக வாதாடுபவர்கள் சொல்லும் காரணம், ஒவ்வொரு நாடுகள் வெளியிடும் கரன்ஸிகள் மதிப்பில் பெரிய மாற்றம் இருக்காது, ஆனால் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து உயரும். (குறைந்தபட்சம் 2140 ஆண்டு வரை). அதனால் பிட்காயின் என்னும் சர்வதேச கரன்ஸியை வைத்துக்கொள்ளலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.

எப்படி பயன்படுத்துவது?

எக்ஸேஞ்ச்கள் வைத்திருக்கும் செயலிகளை தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகவரி இருக்கும். ஆனால் அந்த முகவரி நிலையானது அல்ல. அடிக்கடி மாறக்கூடியது. யாருக்காவது பிட்காயின் அனுப்பவேண்டும் என்றால் அப்போதைய அவரின் முகவரி/க்யூஆர்கோட் கேட்டு வாங்கிய பிறகு அனுப்ப வேண்டும். அதேபோல உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றாலும் உங்களின் தற்போதைய முகவரி/க்யூஆர்கோடு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு முறையும் இதேபோலதான் பரிமாற்றம் நடக்கும்.ஏற்கெனவே கூறியது போல யார் அனுப்பியது, யார் பெற்றது என தெரியாது.

சமீபத்தில் எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளின் 4 லட்சம் தகவல்கள் திருடப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இங்கு இதுபோல தகவல் திருடப்பட வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்கள்.

இந்தியாவில்?

இப்போதுதான் இந்தியாவில் பயன்பாடு தொடங்கி இருக்கிறது. மொபைல் ரீசார்ஜ், டிடிஹெச் ரீசார்ஜ் போன்றவை பிட்காயின் பயன்படுத்தி செய்ய முடியும். பிட்காயினை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. இப்போதைக்கு அதை நெறிபடுத்தும் திட்டமும் இல்லை என கடந்த 2013-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்ரவர்த்தி தெரிவித்தார். அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் பிட்காயின் ஏற்ற இறக்கம் சிறிது கவலை தருகிறது, அதற்காக பிட்காயினை மொத்தமாக நிராகரிக்கவும் இல்லை என்று கூறினார். ஆனால் இதுவரை பிட்காயின்களுக்கு விதிமுறைகளை வகுக்கவில்லை. பணத்தின் மதிப்பு என்பதே மக்கள் அதை நம்புகிறார்கள் என்பதால் உருவாவது. பிட்காயினை பெரும்பாலானவர்கள் நம்புகிறார்களா என்பதை காலம் தீர்மானிக்கும்

*2018 அணை பாதுகாப்புச் சட்டம்*

#Group2mains

2018 அணை பாதுகாப்புச் சட்டம்

என்பது நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சட்டம் என்கிறது மத்திய அரசு.உலகில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அணைகளின் எண்ணிக்கை அதிகம். 5254 பெரிய அணைகள் ஏற்கனவே உள்ள நிலையில் மேலும் 447 அணைகள் கட்டப்பட்டுவருகின்றன.அணை பாதுகாப்புக்கான தேசிய கமிட்டி, மத்திய அணை பாதுகாப்பு அமைப்பு, மாநில அணை பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் மத்திய நீர் ஆணையம் அணை பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால், அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையாது.இந்தியாவில் தற்போது உள்ள அணைகளில் 75 சதவீத அணைகள் 25 ஆண்டுகள் பழமையானவை. 164 அணைகள் 100 வருடத்திற்கு மேல் பழமையானவை.இந்தியாவில் இதுவரை 36 அணை உடைப்பு நிகழ்வுகள் ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 11 முறையும் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, உத்தராகண்ட் ஆகியவற்றில் ஒரு முறையும் அணை உடைப்புகள் ஏற்பட்டுள்ளன.

தற்போது அறிமுகப்படுத்தப்படும் அணை பாதுகாப்பு மசோதா, மத்திய அளவிலும் மாநில அளவிலும் அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வழிவகுக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதும் அணை பாதுகாப்பை தரப்படுத்த முடியுமென மத்திய அரசு நினைக்கிறது. அணையின் உரிமையாளரையே அணை பாதுகாப்பிற்கு இந்த சட்டம் பொறுப்பாக்குகிறது.2018 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும். அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி கொள்கைகளை உருவாக்கும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அவற்றைச் செயல்படுத்தும்.இந்த அமைப்புகள், மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்படும். அணைகள் குறித்த தேசிய அளவிலான தகவல் களஞ்சியம் உருவாக்கப்படும். அணைகளில் ஏற்படும் விபத்துகள் பதிவுசெய்யப்படும்.இரு மாநிலங்களினுடைய அணை பாதுகாப்பு அமைப்புகளிடம் ஏற்படும் முரண்பாட்டை இந்த அமைப்புகள் சரிசெய்யும். அணையின் உரிமையாளருக்கும் அணை அமைந்திருக்கும் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்க்கும்.ஒரு மாநிலத்திற்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு செய்ய வேண்டியவற்றை தேசிய ஆணையம் செயல்படுத்தும்.

இந்தச் சட்டத்தின்படி அணைகளின் பாதுகாப்பிற்கான மாநில கமிட்டியும் மாநில அமைப்பும் உருவாக்கப்படும்.ஒவ்வொரு அணையின் உரிமையாளரும் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பை உருவாக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் வரக்கூடும், எவ்வளவு தண்ணீர் வெளியேற்றப்படக்கூடும் என்ற தகவல்களை வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும்.ஒவ்வொரு அணைக்கும்அபாய கணிப்பு அறிக்கை, நெருக்கடிகால நடவடிக்கை அறிக்கை ஆகியவற்றை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்க வேண்டும். புதிய அணைகளுக்கு, அவை கட்டப்படும் முன்பே உருவாக்க வேண்டும்.தன்னிச்சையான நிபுணர் குழுவால் அணையின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். முதல் அறிக்கை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்கப்பட வேண்டும். பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.அணை பாதுகாப்புக் குழுவைப் பணிசெய்யவிடாமல் தடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும். அணை பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தவறு ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட துறையின் தலைவர் அதற்குப் பொறுப்பாவார்.