Monday, December 27, 2021

*கக்கன்*

🦉பி.கக்கன் நினைவு நாள்:😢
*************************!
உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் கக்கன் அவர்கள் ஒரு வைரகல்.

மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடு களுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர்.

மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.

காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றனர்.

இந்திய சுதந்திரத்திற்க்கு பின் தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனம் என்று அதிகார வர்கத்தால் பிரிக்கபட்ட மனித இனதின் முதல் மனிதர் கக்கன். அந்த புனிதர் வகித்த பதவியை தான் இன்று பல பணம் திண்ணும் பிணங்கள் வகிக்கிறது.

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார்.

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.

விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களேயே ஆரம்பிக்கபட்டது.

அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.

அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார்.

பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைப் போய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார்

கக்கன். கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு,.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11,000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்.

டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது

Sunday, December 26, 2021

*ரேஷன் கார்டுகளில் ( RATION CARD) உள்ள சில குறியீடுகள்*

*ரேஷன் கார்டுகளில் ( RATION CARD) உள்ள சில குறியீடுகளுக்கு 
எல்லாம் என்ன பொருள்?


 #PHH

 - முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். 

 #phh_aay

 ரேஷன் கார்டில் PHH - AAY என்று குறிப்பிட்டு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம். 

 #NPHH

 - முன்னுரிமை இல்லாதவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில்
NPHH  என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். 

 #NPHH_S

 ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம். 

 #NPHH_NC

 ரேஷன் கார்டில் இந்தக் குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்......

#பகிர்வு_பதிவு

*தோழர் இரா. நல்லகண்ணு*

தோழர் இரா. நல்லகண்ணு 

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். 


இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் நல்லகண்ணு. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1943-ல் கம்யூனிஸ்ட் இயக்கம் அவரை அணைத்துக்கொண்டது. 

எடுத்த எடுப்பிலேயே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கிவிட்டார்.1949, டிசம்பர் 20 அன்று தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாகப் பதுங்கியிருந்த நல்லகண்ணுவைக் கைதுசெய்தது போலீஸ். அவரது மீசையைப் பொசுக்கியும் முடிகளைப் பிய்த்தும் போலீஸார் நடத்திய சித்திரவதையே நல்லகண்ணு மீசையைத் துறக்கக் காரணமானது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழர் நல்லகண்ணு. நான்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச்செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் என்று நல்லகண்ணு நடத்திய போராட்டங்களின் வரலாறு நீளமானது. 1999 தென் மாவட்ட கலவரங்களின்போது, ஒரு சாதிக்காரர் கொல்லப்பட்டால், சம்பந்தமே இல்லாமல் எதிர் சாதியில் ஒருவர் கொல்லப்படுவது என்று தொடர் கொலைகள் விழுந்தன. நல்லகண்ணுவின் மாமனாரும் சாதி ஒழிப்புப் போராளியுமான அன்னச்சாமியும் அப்படி வெட்டிக்கொல்லப்பட்டார். நல்லகண்ணு உணர்ச்சிவசப்பட்டிருந்தால் கலவரம் மேலும் பெரிதாகியிருக்கும். ‘உள்ளூர்க்காரர்கள் செய்திருக்கவே மாட்டார்கள்’ என்று உறுதியாக நின்றார். மாமனார் மரணத்துக்கு அரசு கொடுத்த இழப்பீட்டையும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே கொடுத்துவிட்டார்.

சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை கொண்டவர். குற்றாலம் அருவிக்கு அருகில் ‘ரேஸ் கோர்ஸ்’ அமைக்கும் முயற்சி நடத்ததை, 1985-ல் ‘தாமரை’யில் கட்டுரை எழுதியே தடுத்து நிறுத்தினார். 2010-ல் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித் தடை வாங்கினார்.

மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு, மூன்றிலுமே தோற்கடிக்கப்பட்டார். 1967 மற்றும் 1977 சட்ட மன்றத் தேர்தல்களில் அம்பாசமுத்திரத்திலும், 1999 கோவை மக்களவைத் தேர்தலில் 

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணையவேண்டும் அதுதான் இந்தியாவிற்கு
தேவை"  என்ற சிந்தனைக்கொண்ட "தோழர்" நல்லக்கண்ணு பிறந்த தினம் இன்று. புதியதாக வந்த அரசியல்வாதிகளுக்கு ஆதரவு அளித்த நாம், இன்றுவரை நல்லக்கண்ணுவிற்கு கொடுக்காமல் இருப்பது அரசியல் பற்றிய அறிவு குறைவாக இருப்பதையே வெளிக்காட்டுகிறது.

`ஒருவேளை தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால், நல்லகண்ணு  முதலமைச்சராக இருந்திருப்பார். அது ஒரு பொற்காலமாக இருந்திருக்கும்.”



“இன்னைக்கி இந்த சுத்துவட்டாரமே சாப்பிடுதுன்னு சொன்னா... அது அவராலதான்.” 

“எங்க ஊரையே காப்பாத்துன கடவுள்னுதான் அவரைச் சொல்லணும்.”

“

Wednesday, July 28, 2021

*ஒலிம்பிக் போட்டி*

*👆உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிக்கான கொடி பிறந்த வரலாறு* உங்களுக்கு தெரியுமா?


இதுகுறித்த ஒரு பார்வை: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உலகத்தின் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள் ஒலிம்பியா நகரத்தில் குழுமினார்கள். போட்டியில் வென்ற வீரர் களுக்கு அந்த காலத்தில் வெற்றியின் சின்னமாக அணிவிக்கப்படும் ஆலிவ் இலைகளினால் ஆன கிரீடம் அணிவிப்பார்கள்.
வெள்ளை நிறத்தில் உள்ள ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தபடி அமைந்திருக்கும்.
நவீன ஒலிம்பிக் போட்டியை ஒருங்கிணைத்தவரான பியர்ரி டி குபர்டீன் என்பவரால் 1912ம் ஆண்டு, இந்த கொடி உருவாக்கப்பட்டது.
இந்த 5 வளையங்களும், ஆசியா-ஐரோப்பா, ஆப்பிரிக்கா, இரு அமெரிக்கா கண்டங்கள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய கண்டங்களை குறிப்பதாக சமீபகால வரலாறு கூறுகிறது. ஆனால் முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்ற
உலக நாடுகளின் கொடியில் இடம்பெறும் பொதுவான வண்ணங்களைக் கொண்டு வளையங்களுக்கு வண்ணம் தேர்வு செய்யப்பட்டதாக அறியலாம்.
அனைத்து மக்களிடையே விளையாட்டு மூலம் நட்புறவை குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டவைதான் இந்த ஒலிம்பிக்கொடி. இதனால்தான் வளையங்கள் பிணைக்கப்பட்டுள்ளன.

Tuesday, December 25, 2018

*அன்புள்ள தினமணி ஆசிரியர் அவர்களுக்கு,*

24.12.18   அன்று தினமணியில் வெளியான "தேவையா இத்தனை  விடுமுறைகள்" கட்டுரை வாசித்தேன்.  அது குறித்து அடிப்படையான சில உண்மைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . இந்த உண்மைகளை கட்டுரையாளர் அறியாமல் இருக்க வாய்ப்புள்ளது.  ஆனால் பத்திரிகை செய்தி ஆசிரியருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்.

# 2019 தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு விடுமுறை பட்டியலில்  22 விடுமுறைகளில்  5 நாட்கள் சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் அமைகிறது.  இந்த ஆண்டு இது குறைவு

#  அதே போல மத விடுப்புகள் பெரும்பாலும் பண்டிகை அரசு விடுமுறை நாட்களிலோ சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ அமைகின்றன.

#  ஈட்டிய விடுப்பு அரசு ஊழியர்களுக்கு தான் 30 நாட்கள். ஆசிரியர்களுக்கு  17 நாட்கள் தான். இந்த விடுப்பை துய்க்காமல் ஒப்படைத்தால் பணப்பயன்கள் உண்டு என்கிற காரணத்தால்  90 சதவீத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இந்த விடுப்பை துய்ப்பதில்லை. சேமிக்கவே விரும்புவார்கள்.  இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. 

. # 21 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் 1 நாள் ஈட்டிய விடுப்பு குறையும்.  28 நாட்களுக்கு மேல் தாண்டினால் மருத்துவர் போர்டு மற்றும் மாவட்ட உயர் அதிகாரியின் அனுமதி பெற்று தான் மீண்டும் பணியில் சேர முடியும்.  மருத்துவ விடுப்புகளால் பதவி உயர்வு, ஆண்டு ஊதிய உயர்வு, பணி வரன்முறை போன்ற தனிப்பட்ட பாதிப்புகள் இருப்பதால் மருத்துவ விடுப்பு மிக அவசியமானால் மட்டுமே துய்க்கப்படுகிறது. 15 நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்தாலே அதில் 4 நாட்கள் வார விடுமுறையாகும்.
# உள்ளூர் விடுமுறைகள் அனைத்தும் சனிக்கிழ மைகளில் ஈடு செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே.

# அரசு தலைவர்கள் இறப்பின் போது விடப்படும் விடுமுறை பாதுகாப்பு கருதியே. ஓய்வு எடுக்க அல்ல.

# தொடக்கப் பள்ளிகள்  220 பணி நாட்கள் , மேல்நிலைப் பள்ளிகள்  210 பணி நாட்கள், கல்லூரிகள்  180 பணி நாட்களுக்கும் குறையாமல் பணியாற்ற வேண்டும் என்பது அரசு விதி. மற்ற அரசு  அலுவலகங்கள் இதை விட அதிக நாட்களே செயல்படுகின்றன.யாரும் மீற முடியாது.இது  வருகைப்பதிவேட்டை பார்த்தாலே தெரியும். இப்படியிருக்கையில் 174 நாட்கள் தான் பணி நாட்கள் என்று கட்டுரையாளர் எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது தெரியவில்லை.

# காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை ஆகியவை மாணவர்கள் மனநலம், கற்கும் திறன்,சோர்வு,உடல்நலன் ஆகியவற்றை யோசித்தே கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களால் சிபாரிசு செய்யப்படுகிறது  . இந்த  விடுமுறை நாட்களில் ஆசிரியர்களை ஊதியம் பெறாமல் பணியாற்ற தயாரா எனக்கேட்கின்றார் கட்டுரையாளர்.  இந்த விடுமுறைக்கு மட்டும் வேறு வேலை தேட முடியுமா?

# தேர்தல் நாளன்று அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள் என்ற சாதாரண விஷயம் கூட கட்டுரையாளருக்கு  நினைவுக்கு வரவில்லை.

# சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை சுட்டிக்காட்டிய கட்டுரையாளர் இந்தியா ஒரு மதசார்பற்ற, நல்லிணக்கம் காட்டும் பல்வகை கலாச்சாரத்தை கொண்ட நாடு என்பதை மறந்துவிடக்கூடாது.  இங்கே அனைத்து வகையான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. 

# அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகளால் அரசுக்கு எவ்வித நஷ்டமுமில்லை

# பல வகை விடுப்புகள் இருந்தாலும் விடுப்பு அனுமதி  கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் காவல்துறை நண்பர்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி பார்க்கின்றோம்.

# விடுப்பு இருந்தும் அதிகாரிகள் /தலைமை ஆசிரிய்ர்கள் அலுவலக நலன் கருதி அனுமதி தராததால் அதை அனுபவிக்க முடியாதவர்கள் ஏராளம்.

# பெரும்பாலானவை ஈராசிரியர் பள்ளிகளாகவே இருப்பதால் விடுப்பு இருந்தாலும் தேவைப்படும்போது துய்க்க முடியாதவர்கள் ஏராளம்.  

# கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு சனி ஞாயிறு  விடுமுறை இரவு பகல் என்பதே  கிடையாது.  மாவட்ட ஆட்சியர்,வட்டாட்சியர் எப்போது அழைத்தாலும் செல்ல தயாராக இருக்க வேண்டும்.

# தீபாவளி, புத்தாண்டு பண்டிகைக்கு வீட்டுக்கு செல்லாமல் பணியாற்றும் காவல்துறையினர், போக்குவரத்துக்கு ஊழியர்கள் இவருடைய கண்களுக்கு புலப்படவில்லை போலும்.

# சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் நகராட்சிக்கு  குடிநீர் வழங்கும் ஊழியர்கள்,  ஆண்டு முழுவதும் செயல்படும் அரசு மருத்துவமனை ஊழியர்கள், மின்சார ஊழியர்கள்..இவர்களை பார்த்த பின்பும் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்று புலம்புவதை என்னவென்பது.

பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது

ஒரு தரமான நாளிதழ் இதை போல எடுத்தேன் கவிழ்த்தேன் ரக கட்டுரைகளை பிரசுரிப்பது அழகல்ல.

Saturday, December 22, 2018

*போக்ஸோ சட்டம் (Protection of Children from Sexual Offences Act - 2012)*

Group 2  Mains
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது.

இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

● போஸ்கோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம்: இதற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டணையாகவும் உள்ளது. கூடவே அபராதமும் விதிக்கப்படும்.

● போஸ்கோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6 ந் படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

● போஸ்கோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்பைகளை தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம். அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

●  போஸ்கோ சட்டம் பிரிவு 9 மற்றும் 10ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிரை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

● போஸ்கோ சட்டம் பிரிவு 11 மற்றும் 12ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

● போஸ்கோ சட்டம் பிரிவு 13 மற்றும் 14ன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது, குற்றம். இது இணைய தளம், கணிணி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும்.

●  போஸ்கோ சட்டம் பிரிவு 18ன் படி குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

●  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே, குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும்.

●   குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம். இதற்கு 6 மாத சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

இதில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை என்ற ஷரத்தில் மாற்றம் கொண்டு வந்து மரண தண்டனை என்ற சட்டத்திருந்ததை அவசரச்சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வயது வரம்பும் 18 ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

.
#இந்தியன்_எக்ஸ்பிரஸ்