Tuesday, December 18, 2018

*பிரெக்ஸிட் என்றால் என்ன?*

ஆங்கிலத்தில் Brexit. (Britian Exit) அதாவது பிரிட்டன் வெளியேறுதல் என்று பொருள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான விஷயமாதலால், இப்பதம் பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் என்றால் என்ன?

பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்புக்காக இரண்டாம் உலகப் போருக்கு பின் ஏற்படுத்தப்பட்டது தான் ஐரோப்பிய ஒன்றியம். இந்த ஒன்றியத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, க்ரோஷியா, சிப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், ஃபின்லாந்து, ஃப்ரான்ஸ், க்ரீஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஐயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகள் இருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கென்று, `ஈரோ' என்ற தனி பணம் உள்ளது. இதனை 19 நாடுகள் பயன்படுத்துகின்றன. இதற்கென்று நாடாளுமன்றமும் உள்ளது.

ஏன் ஐரோப்பியா ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறே வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததற்கு முதன்மையான காரணம் குடியேற்றம்தான். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த பலநாடுகள் குடியேற்ற விஷயத்தில் தாராளவாதபோக்குடன் நடந்து கொண்டது. பல நாடுகளிலிருந்து வருவோர் பிரிட்டனில் குடியேறுவது காரணமாக, தங்கள் நாட்டின் கலாசாரம், பொருளாதாரம் மோசமடைவதாக பிரிட்டன் மக்கள் கருத தொடங்கினர். இந்த எண்ணமானது இது தொடர்பாக ஒரு வாக்கெடுப்புக்கு வித்திட்டது. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடந்த அந்த வாக்கெடுப்பில் 71.8 % பேர் கலந்து கொண்டனர். 51.9 % மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரிட்டன்?

ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் அந்த ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கு இசைவாக வாக்களித்தனர். தனிப்பட்ட இரு நபர்களின் உறவுகள் சுமூகமாக பிரிந்து செல்வதிலேயே ஏராளமான சிக்கல்கள் இருக்கும் இப்போதைய சூழலில் வணிகம், ராஜாங்கம் என நெருக்கமான தொடர்பு உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நினைத்த உடனே எல்லாம் வெளியேறிவிட முடியாது. அதனால், சுமூகமாக பல உடன்படிக்கைகளை மேற்கொண்டுவிட்டு, ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. அதற்கான காலக்கெடு 2019. அதாவது, மார்ச் 29, 2019 அன்று இரவு பிரிட்டன் நேரப்படி 11 மணிக்கு ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரிட்டன்.

போரிஸ் ஜான்சன் யார். அவர் ஏன் இப்போது ராஜிநாமா செய்தார்?

போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலாளர். பிரெக்ஸிட்டிற்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்தவர். ஐரோப்பிய ஒன்றியத்திலிந்து வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் பிரதானமாக இருந்தவர். அவர் பிரெக்ஸிட் தொடர்பாக காத்திரமான முடிவுகளை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி, பிரெக்ஸிட் கனவை மே தெரீசா சிதைப்பதாக கூறி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

நன்றி: தமிழ் பிபிசி

பிரெக்ஸிட் - ஏன் அயர்லாந்து எல்லை பிரதான தடையாக இருக்கிறது?

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது என்று இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் வாக்களித்தது.

அப்போதிருந்து, வெளியேறுதலுக்கான நடவடிக்கைகளின் விவரங்களில் ஒப்புதல் ஏற்படுத்துவதற்காக கடினமான பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தன்னுடைய எண்ணத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தை ஏற்கச் செய்யலாம் என்று கருதி, இறுதியில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, நாடாளுமன்றத்தில் டிசம்பர் 11-ல் - இன்றைக்கு வாக்கெடுப்பு நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தார்.

மற்ற கட்சி எம்.பி.க்களுடன் சேர்ந்து, தனது கட்சி எம்.பி.க்கள் பலரும், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால், இதற்கு வெற்றி கிடைக்காது என்று பிரதமருக்குத் தெளிவாகிவிட்டதால், வாக்கெடுப்பு கைவிடப்பட்டது.

வடக்கு அயர்லாந்து - பிரிட்டனின் ஒரு பகுதி - அயர்லாந்து குடியரசு இடையிலான எல்லைப்புறத்தை எப்படி கையாளப் போகிறோம் என்பது பற்றிய பிரச்சனை காரணமாகத்தான் தன்னுடைய கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே (மற்றும் நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மையை அளிக்கும் வடக்கு அயர்லாந்து எம்.பி.க்களிடமும்) எதிர்கருத்துகளை அவர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால், இந்தப் பிரச்சினை ஏன் பிரெக்சிட் திட்டங்களைத் தடம்புரளச் செய்ய வேண்டும்?

மக்கள் நடமாட்டமும் சரக்குகள் போக்குவரத்தும் தடையற்று நடைபெறுதல்
ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையில் சோதனைகள் ஏதுமின்றி, கட்டணங்கள் ஏதும் செலுத்தாமல் தடையின்றி சரக்குப் போக்குவரத்து நடைபெறலாம் என்பது ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் முதன்மையான ஆதாயங்களில் ஒன்று.

எனவே, இப்போது, அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இடையில் குறைந்த கட்டுப்பாடுகளுடன் சரக்குகள் மற்றும் சேவைகள் நடைபெறுகின்றன. பொருட்களை சுங்கத் துறை சோதனை மற்றும் தரம் உறுதி செய்யும் சோதனைகளைக்கு உட்படுத்த வேண்டியதில்லை. ஆனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் / வெளியேறும் போது, சுங்கம் செலுத்தும் யூனியனில் இருந்து அது வெளியேறும். உள்ளே வரும் அல்லது வெளியில் செல்லும் போக்குவரத்துகள் அனைத்தும் சோதனை செய்யப்படும், சுங்கம் செலுத்த வேண்டியிருக்கும்.

சரக்குகள் மட்டும் தான் பாதிக்கப்படும் என்பது கிடையாது - மக்கள் தடையின்றி சென்று வருவதும் கூட தடைப்படும். இது வடக்கு அயர்லாந்துக்கு முக்கியமான பிரச்சினையாக இருக்கும்.

வெளிப்படையான தடைகள் இல்லாத மற்றும் சுங்கச் சோதனைகள் இல்லாத `தடங்கல் இல்லாத எல்லை' வேண்டும் என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது. பல பத்தாண்டுகளாக வடக்குப் பகுதியில் பெரிய பிரச்சினையாக இருந்த பிரிவினை மற்றும் வன்முறை திரும்பாதிருக்க இது தேவை என ஒப்புக்கொள்ளப்பட்டது.

அயர்லாந்து எல்லையில் என்ன முக்கியம்
அயர்லாந்து குடியரசுக்கும் வடக்கு அயர்லாந்துக்கும் இடையில் உள்ள எல்லை , அதன் பிரதிநிதித்துவம் காரணமாக முக்கியமானது.

அயர்லாந்தின் பெரும் பகுதி - 32 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் - 1922ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றன. ஆனால் வடக்கு அயர்லாந்தின் ஆறு மாவட்டங்கள் பிரிட்டனின் அங்கமாயின.

வடக்கு அயர்லாந்தில் உள்ள தேசியவாதிகள் - பெருமளவில் கத்தோலிக்கர்கள்- ஒருங்கிணைந்த அயர்லாந்து இருக்க வேண்டும் என விரும்பினர். ஆனால் ஐக்கியவாதிகள் - பெரும்பான்மை ப்ராட்டஸ்டண்ட்கள்- அதே நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்பினர்.

இந்த இரு குழுவினருக்கும் இடையிலான மோதல் 1968ல் ``பிரச்சினைகளாக'' உருவெடுத்தது. சமூகங்களுக்கு இடையில் துப்பாக்கிச் சூடுகள், குண்டுவீச்சுகள் என ஏற்பட்டு பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் காயமடைந்தனர்.

1998ல் இரு அரசுகளும், வடக்கு அயர்லாந்தில் உள்ள அரசியல் கட்சிகளும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒப்புக்கொள்ளும் வரையில், இந்தப் பிரச்சனை நீடித்தது.

முன்பு தீவிரமான அரணாக - இருந்த பகுதிகள் வடக்கு மற்றும் தெற்கு என்ற பிரிவினை இல்லாமல் போயின. இதனால் பயணமும் வர்த்தகமும் எளிதானது. நடைமுறையில் தொடர்ச்சியான பகுதிகளைக் கொண்ட தீவாக மாறியது.

இதை இழப்பதும் ``கடினமான எல்லை'' முறைக்குத் திரும்புவதும், வன்முறைக்குத் திரும்புவதைப் போல ஆகிவிடும் என்ற அச்சம் இருக்கிறது. ஆனால் பிரெக்சிட்டுக்கு - 2019 மார்ச் 29 - என்ற கெடு உள்ளது. எனவே சுங்கம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டாக வேண்டும்.

நீடித்த காலத்துக்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. ஆனால், தெரீசா மே ஓர் தாங்கிப் பிடிக்கும் திட்டத்துக்கு இசைவு தெரிவித்துள்ளார். நீண்டகால நோக்கிலான ஒரு தீர்வு காணப்படும் வரையில் சுங்க ஒன்றியத்துக்குள் வடக்கு அயர்லாந்து நீடிக்கும் என்ற "அவசரகால முன்னெச்சரிக்கை'' ஏற்பாடாக அது உள்ளது.

பிரதமரின் திட்டத்தில் உள்ள இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாட்டில் - வடக்கு அயர்லாந்தின் ஜனநாயக ஐக்கிய கட்சிக்கும் (DUP) - கன்சர்வேட்டிவ் கட்சியில் அதிருப்தியாளர்கள் பலருக்கும் - பிரச்சனை இருக்கிறது.

அவசரகால முன்னெச்சரிக்கை ஏன் இந்த நடவடிக்கையை அழிக்கிறது
மே -வின் நடவடிக்கைக்கு எதிராக வாக்களிப்பது என்று கன்சர்வேட்டிவ் எம்.பி.க்களில் சில டஜன் பேர் எதிர்க்கட்சிகளுடன் - முக்கியமாக DUP உடன் - கை கோர்ப்பதற்குத் திட்டமிட்டனர்.

அவசரகால முன்னெச்சரிக்கை திட்டத்தால், வடக்கு அயர்லாந்துக்கும், பிரிட்டனின் இதர பகுதிகளுக்கும் இடையில் புதிய ஒழுங்குமுறை தடைகள் ஏற்படலாம் என்று கருதுவதால் கன்சர்வேட்டிவ் அதிருப்தியாளர்களும் டி.யு.பி. தரப்பினரும் இதை விரும்பவில்லை.

கூடுதலாக, இது சட்டபூர்வ கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துவிடும். ஐரோப்பிய யூனியனின் ஒப்புதல் இல்லாமல் அவசரகால முன்னெச்சரிக்கை ஏற்பாட்டில் இருந்து பிரிட்டன் வெளியேற முடியாது.

தற்காலிக நடவடிக்கை என முன்வைக்கப்படும் திட்டம், நடைமுறையில் நீடித்த நடவடிக்கையாக மாறிவிடும்.

வடக்கு அயர்லாந்து மற்றும் பிரிட்டனின் இதர பகுதிகளுக்கு இடையில் ஒரு இடைவெளியை இது உருவாக்கிவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். ஒன்றியம் என்ற அமைப்புக்கே கூட முடிவு கட்டுவதை இது வேகப்படுத்தும் என்றும் அஞ்சுகின்றனர்.

திட்டம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும்

டிசம்பர் 11 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்த "அர்த்தமுள்ள வாக்களிப்பு'' என்று கூறப்பட்ட, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் எந்தத் திட்டத்துக்கும் ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் அரசு ஏற்பளிப்பு செய்ய முடியாது.

ஏறத்தாழ எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் பிரிட்டன் பிரதமரின் நடவடிக்கைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளனர் என்பதால், இதில் வெற்றி பெற வேண்டுமானால், தனது கட்சிக்குள் திருமதி மே -வுக்கு அதிருப்தி இருக்கக் கூடாது.

கூடுதலாக டி.யு.பி.யில் இருந்து குறைந்தபட்சம் 10 எம்.பி.க்களின் ஆதரவு அவருக்குத் தேவை.

"அவசரகால முன்னெச்சரிக்கை திட்டம் கைவிடப்பட வேண்டும்'' என்று தொலைபேசி மூலம் பிரதமரிடம் கூறியுள்ளதாக டி.யு.பி. தலைவர் அர்லென் ஃபாஸ்டர் தெரிவித்துள்ளார்.

கைவசம் உள்ள ஒரே திட்டம்

எனவே, ஒரு வகையில், இந்தத் திட்டத்துக்கு கன்சர்வேட்டிவ் மற்றும் டி.யு.பி. ஆதரவைப் பெறுவதற்கு, அவசரகால முன்னெச்சரிக்கை திட்டத்தில் தெரசா மே திருத்தம் செய்தாக வேண்டும்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் மே-வின் அரசாங்கம் எட்டியுள்ள திட்டத்தில் மேற்கொண்டு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என்று ஐரோப்பிய யூனியன் தொடர்ந்து கூறி வருகிறது.

அப்போதும் கூட, நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதற்கு உதவியாக, இந்தத் திட்டத்தில் சில விஷயங்களில் மாறுதல் செய்வதற்கு ஆதரவைப் பெறுவதற்காக தெரசா மே பெர்லினுக்கு பயணம் மேற்கொண்டார்.

வாக்கெடுப்பை ஒத்திவைத்த பிறகு, வடக்கு அயர்லாந்து எல்லைத் திட்டம் குறித்து ``மேலும் உத்தரவாதங்களை'' பெறுவதற்கு நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே மற்றும் ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்க்கெலுடன் தெரீசா மே பேச்சு நடத்தி வருகிறார்.

ஐரோப்பிய யூனியன் ஒப்புக்கொள்ளுமா?
ஐரோப்பிய யூனியன் "மீண்டும் பேச்சு நடத்தாது'' என்று ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டோனால்ட் டஸ்க் கூறியுள்ளார். ஆனால் "பிரிட்டன் ஏற்பளிப்புக்கு உதவி'' செய்வது எப்படி என்று தலைவர்கள் பேச்சு நடத்தலாம்.

இந்த உதவி என்னவாக இருக்கும் என்பதும், அவசரகால முன்னெச்சரிக்கை திட்டத்தை எதிர்ப்பவர்களை திருப்திப்படுத்துவதற்கு இது போதுமானதாக இருக்குமா என்பதும் தான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

நன்றி: தமிழ் பிபிசி

No comments:

Post a Comment