Tuesday, December 18, 2018

*2018 அணை பாதுகாப்புச் சட்டம்*

#Group2mains

2018 அணை பாதுகாப்புச் சட்டம்

என்பது நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சட்டம் என்கிறது மத்திய அரசு.உலகில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அணைகளின் எண்ணிக்கை அதிகம். 5254 பெரிய அணைகள் ஏற்கனவே உள்ள நிலையில் மேலும் 447 அணைகள் கட்டப்பட்டுவருகின்றன.அணை பாதுகாப்புக்கான தேசிய கமிட்டி, மத்திய அணை பாதுகாப்பு அமைப்பு, மாநில அணை பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் மத்திய நீர் ஆணையம் அணை பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால், அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையாது.இந்தியாவில் தற்போது உள்ள அணைகளில் 75 சதவீத அணைகள் 25 ஆண்டுகள் பழமையானவை. 164 அணைகள் 100 வருடத்திற்கு மேல் பழமையானவை.இந்தியாவில் இதுவரை 36 அணை உடைப்பு நிகழ்வுகள் ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 11 முறையும் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, உத்தராகண்ட் ஆகியவற்றில் ஒரு முறையும் அணை உடைப்புகள் ஏற்பட்டுள்ளன.

தற்போது அறிமுகப்படுத்தப்படும் அணை பாதுகாப்பு மசோதா, மத்திய அளவிலும் மாநில அளவிலும் அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வழிவகுக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதும் அணை பாதுகாப்பை தரப்படுத்த முடியுமென மத்திய அரசு நினைக்கிறது. அணையின் உரிமையாளரையே அணை பாதுகாப்பிற்கு இந்த சட்டம் பொறுப்பாக்குகிறது.2018 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும். அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி கொள்கைகளை உருவாக்கும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அவற்றைச் செயல்படுத்தும்.இந்த அமைப்புகள், மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்படும். அணைகள் குறித்த தேசிய அளவிலான தகவல் களஞ்சியம் உருவாக்கப்படும். அணைகளில் ஏற்படும் விபத்துகள் பதிவுசெய்யப்படும்.இரு மாநிலங்களினுடைய அணை பாதுகாப்பு அமைப்புகளிடம் ஏற்படும் முரண்பாட்டை இந்த அமைப்புகள் சரிசெய்யும். அணையின் உரிமையாளருக்கும் அணை அமைந்திருக்கும் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்க்கும்.ஒரு மாநிலத்திற்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு செய்ய வேண்டியவற்றை தேசிய ஆணையம் செயல்படுத்தும்.

இந்தச் சட்டத்தின்படி அணைகளின் பாதுகாப்பிற்கான மாநில கமிட்டியும் மாநில அமைப்பும் உருவாக்கப்படும்.ஒவ்வொரு அணையின் உரிமையாளரும் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பை உருவாக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் வரக்கூடும், எவ்வளவு தண்ணீர் வெளியேற்றப்படக்கூடும் என்ற தகவல்களை வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும்.ஒவ்வொரு அணைக்கும்அபாய கணிப்பு அறிக்கை, நெருக்கடிகால நடவடிக்கை அறிக்கை ஆகியவற்றை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்க வேண்டும். புதிய அணைகளுக்கு, அவை கட்டப்படும் முன்பே உருவாக்க வேண்டும்.தன்னிச்சையான நிபுணர் குழுவால் அணையின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். முதல் அறிக்கை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்கப்பட வேண்டும். பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.அணை பாதுகாப்புக் குழுவைப் பணிசெய்யவிடாமல் தடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும். அணை பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தவறு ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட துறையின் தலைவர் அதற்குப் பொறுப்பாவார்.

No comments:

Post a Comment